Friday, September 9, 2011

நெஞ்சை நெருடும் நியாயங்கள்

காளை: 
கைகோர்த்து நடந்தவளே - என்னக்
கைகழுவ நெனப்பவளே,
பொய்யாச்சா நம்காதல் - என்னப்
பொலம்பும்படி வச்சிட்டியே.
மறந்திடுன்னு சொன்னதுமே
மறந்திட நம் காதலென்ன
அரிசிவித்த மனக்கணக்கா - இல்ல
அடகுவச்ச நகைக்கணக்கா?


கன்னி: 
கண்ணுக்குள்ள என்னவச்சி - நித்தம்
கனவுக்குள்ள மெதந்தவனே,
மெய்யாத்தான் காதலிச்சேன் - இப்போ
மெல்ல நானும் வெலகப்போறேன்.
உசிரைவிட ஒசத்தியாக
ஒன்ன நானும் நேசிச்சேன்
நெனச்சதுமே ஒதறிவிட - என்
நெஞ்சுமட்டும் கல்லா என்ன?


காளை: 
கண்ணாடி நான் பாத்தா
கண்டதெல்லாம் ஒன்னுருவம்
கண்மூடித் தூங்கும்போது
கனவுலயும் ஒன்வதனம்.
ஒன்ன நான் பிரியிறதும்
உசிர மெல்ல விடுகிறதும்
ஒண்ணுதான்னு தெரிஞ்சிக்கடி - என்
ஒணர்வுகளப் புரிஞ்சிக்கடி.


கன்னி: 
மைசூரு மகராசன்
மகளா நான் பொறந்திருந்தா
கழுத்தெல்லாம் நகையோடும்
கைநெறையப் பணத்தோடும்
மருமகளா மனைபுகுந்து
மனம்போல வாழ்ந்திருப்பேன்
நாதியத்த நாயெனக்கு
நடந்திடுமா நல்லதெல்லாம்?


காளை: 
காசுபணம் கணக்குப் பாத்து
கல்யாணம் பேசிவைக்கும்
காலமிப்ப மாறிடிச்சி
கடல்கடந்து போயிடிச்சி.
மனசு ரெண்டும் ஒத்துச்சின்னா
மாலைய நாம் மாத்திக்கலாம்
ஒலகம் வந்தே தடுத்தாலும்
ஒண்ணுசேந்து வாழ்ந்திடலாம்.


கன்னி: 
காசுக்குள்ள மரியாத
கடைசிவரை மாறாது
மனச மதிக்கும் பக்குவந்தான்
மலையேறி நாளாச்சி.
மச்சான் ஒங்க கதையக் கேட்டு
மனசுக்குள்ள மத்தாப்பு
ஆனாலும் நடைமுறைக்கு
அதுக வெறும் காகிதப்பூ.


காளை:
மறந்திடுங்க என்னயின்னு
மனசாரச் சொல்லுறியா?
நெனப்புலயே நாமவாழ்ந்த
நெஜமான வாழ்க்கையத
பட்டுன்னு அறுத்துவிட(ப்)
பதறலையா ஒம்மனசு,
ஒட்டி நின்ன ஒறவ எண்ணி
உருகலையா ஒன் உசிரு?


கன்னி: 
பதறாம இருந்திடுமா
பாவிமக எம்மனசு!
உருகாமப் போயிடுமா
ஒனக்காக என் உசிரு!
அடுத்து ஒரு சென்மத்தில
ஆஸ்தியோட நான்பொறந்து
காளை ஒன்னக் காதலிச்சி
கட்டாயம் கட்டிக்கிறேன்.


-மன்னூரான்

2 comments:

  1. மிகவும் அருமை. இதே வரிகளை யாராவது ஒரு மூத்தவர் எழுதியிருப்பாரேயானால் பலரும் அவரை தலைக்கு மேல் தூக்கிவைத்துப் பாராட்டியிருப்பார்கள்.

    ReplyDelete
  2. உண்மைதான் பஸ்லி! அமுதன் சொல்வதுபோல் இங்கெல்லாம் கழுத்துக்களுக்குத்தான் மாலை, எழுத்துக்களுக்கல்ல. உங்கள் பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete