Friday, November 4, 2011

ஐந்தும் ஆறும்

நெடுஞ்சாலை வழியாக
நகரும் பேருந்து,
பழைய பத்திரிகையொன்றை
படித்தவண்ணமே
வீதியோரச் சங்கதிகளை
வேடிக்கை பார்த்தபடி
பயணிக்கிறேன்.

திடீரென அக்காட்சி
தென்படுகிறது விழிகளுக்கு,
மாமிசத் துண்டொன்றைக்
கவ்வியபடி
சாலையின் குறுக்கே
ஓடிவருகிறது நாயொன்று.

எதிரே வேகமாய்
வந்த வாகனம்
பதம் பார்க்கிறது
நாயை,
அதன் உயிரையும் சேர்த்தே.

துடிதுடித்து இறந்த நாயை
சூழ்ந்துகொள்கின்றன
மாமிசத் துண்டுக்காய்த்
துரத்திவந்த நாய்கள்.
ஆவேசமாய் வந்த அவை
அதிர்ச்சியுற்று நிற்க
மாமிசத் துண்டு மட்டும்
அநாதையாய்
இரண்டடி தள்ளி.

இறைச்சித்துண்டை
ஏறெடுத்தும் பாராமல் 
இறந்துபோன நாய்க்கு
அஞ்சலியாய்க் குரைத்தபடி
அனைத்து நாய்களும்!

சம்பவம் மனதை 
சலனப்படுத்தவே 
பத்திரிகையின்மீது
பார்வையைச் செலுத்துகிறேன்.
'கொழும்பில் குண்டுவெடிப்பு'
கொட்டையெழுத்தில் தலைப்பு
கொள்ளைகொள்கிறது கண்களை.

சம்பவத் தளத்திலிருந்து 
சற்றே தொலைவில்ஒருவர்
கையில் இரத்தம் வழிய
கலைந்து செல்லவே 
அருகிருந்தோர் அந்நபரை
உதவிக்காய் உடனழைத்தும்
சட்டை செய்யாமல் 
தன் சட்டைகொண்டு
கையைப் போர்த்தபடி
அவசரமாய் அங்கிருந்து
அகலும் முயற்சியில்அவர்.

வற்புறுத்தலாய் அவருக்கு
வைத்தியம் பார்க்கவென்று
இரத்தம் தோய்ந்த கையைப்
இறுகப் பற்றுகையில்
பதறி விலகையில்
படக்கென்று விழுந்ததாம்
தங்க வளையல்தரித்த,
வெடியில் சிக்குண்டு
வேறாகிப்போன
வனிதையொருத்தியின் கை.
- மன்னூரான்

Friday, October 28, 2011

துரத்தும் சுயநலம்

நீண்டதூரப் பயணமும்
நீயில்லாச் சயனமும்
எனக்குள்
சோர்வைத் தந்தாலும்,
எழுத்தாளர் மாநாட்டில்
எழுந்திட்ட கோஷங்கள்
என்னைத்
தூக்கி நிறுத்தின.
சமுதாய நலம்பேண
ஏதேனும்
எழுதுவோமென்று
புத்துணர்ச்சி கொண்டு
பேனாவைப் பிடிக்கிறேன்,
அப்போதும்கூட
சுயநலமாய் வருகிறது
உன் பற்றிய கவிதை!
                            - மன்னூரான்

Friday, September 9, 2011

நெஞ்சை நெருடும் நியாயங்கள்

காளை: 
கைகோர்த்து நடந்தவளே - என்னக்
கைகழுவ நெனப்பவளே,
பொய்யாச்சா நம்காதல் - என்னப்
பொலம்பும்படி வச்சிட்டியே.
மறந்திடுன்னு சொன்னதுமே
மறந்திட நம் காதலென்ன
அரிசிவித்த மனக்கணக்கா - இல்ல
அடகுவச்ச நகைக்கணக்கா?


கன்னி: 
கண்ணுக்குள்ள என்னவச்சி - நித்தம்
கனவுக்குள்ள மெதந்தவனே,
மெய்யாத்தான் காதலிச்சேன் - இப்போ
மெல்ல நானும் வெலகப்போறேன்.
உசிரைவிட ஒசத்தியாக
ஒன்ன நானும் நேசிச்சேன்
நெனச்சதுமே ஒதறிவிட - என்
நெஞ்சுமட்டும் கல்லா என்ன?


காளை: 
கண்ணாடி நான் பாத்தா
கண்டதெல்லாம் ஒன்னுருவம்
கண்மூடித் தூங்கும்போது
கனவுலயும் ஒன்வதனம்.
ஒன்ன நான் பிரியிறதும்
உசிர மெல்ல விடுகிறதும்
ஒண்ணுதான்னு தெரிஞ்சிக்கடி - என்
ஒணர்வுகளப் புரிஞ்சிக்கடி.


கன்னி: 
மைசூரு மகராசன்
மகளா நான் பொறந்திருந்தா
கழுத்தெல்லாம் நகையோடும்
கைநெறையப் பணத்தோடும்
மருமகளா மனைபுகுந்து
மனம்போல வாழ்ந்திருப்பேன்
நாதியத்த நாயெனக்கு
நடந்திடுமா நல்லதெல்லாம்?


காளை: 
காசுபணம் கணக்குப் பாத்து
கல்யாணம் பேசிவைக்கும்
காலமிப்ப மாறிடிச்சி
கடல்கடந்து போயிடிச்சி.
மனசு ரெண்டும் ஒத்துச்சின்னா
மாலைய நாம் மாத்திக்கலாம்
ஒலகம் வந்தே தடுத்தாலும்
ஒண்ணுசேந்து வாழ்ந்திடலாம்.


கன்னி: 
காசுக்குள்ள மரியாத
கடைசிவரை மாறாது
மனச மதிக்கும் பக்குவந்தான்
மலையேறி நாளாச்சி.
மச்சான் ஒங்க கதையக் கேட்டு
மனசுக்குள்ள மத்தாப்பு
ஆனாலும் நடைமுறைக்கு
அதுக வெறும் காகிதப்பூ.


காளை:
மறந்திடுங்க என்னயின்னு
மனசாரச் சொல்லுறியா?
நெனப்புலயே நாமவாழ்ந்த
நெஜமான வாழ்க்கையத
பட்டுன்னு அறுத்துவிட(ப்)
பதறலையா ஒம்மனசு,
ஒட்டி நின்ன ஒறவ எண்ணி
உருகலையா ஒன் உசிரு?


கன்னி: 
பதறாம இருந்திடுமா
பாவிமக எம்மனசு!
உருகாமப் போயிடுமா
ஒனக்காக என் உசிரு!
அடுத்து ஒரு சென்மத்தில
ஆஸ்தியோட நான்பொறந்து
காளை ஒன்னக் காதலிச்சி
கட்டாயம் கட்டிக்கிறேன்.


-மன்னூரான்

Thursday, August 11, 2011

மெய்ப்பட வேண்டும்! - கவியரங்கக் கவிதை

(கடந்த 06-08-2011 அன்று ஜீவநதி சஞ்சிகையின் 4ம் வருட நிறைவையொட்டி அல்வாய் கலை அகத்தில் “மெய்ப்பட வேண்டும்!” எனும் தலைப்பிலான சிறப்புக் கவியரங்கொன்று இடம்பெற்றது. கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கவியரங்கில் கவிஞர்களான நாச்சியாதீவு பர்வீன், வட அல்வை சின்னராஜன், அல்வாயுர் செ.கணேசன், மன்னார் பி.அமல்ராஜ், வெ.துஷ்யந்தன் ஆகியோர் பங்கெடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அக்கவியரங்கில் அடியேன் வாசித்த கவிதை இதோ...)

மெய்ப்பட வேண்டும்!

இல்லார் கைகளில் பணமும்
இருப்போர்க்கு ஈந்திடும் மனமும்
கல்லாதாரிடம் அறிவும்
கற்றவரிடத்தில் பணிவும்
பொல்லாதோர்க்குநற் குணமும்
புண்ணியர்க்கென்றுமே நலமும்
இல்லையே என்கின்ற ஏக்கம்
இனியேனும் மெய்ப்பட வேண்டும்!

நேருக்கு நேர்மோதும் வீரம்
நிழலாகத் தொடர்கின்ற நேசம்
பேருக்காய் ஈயாத தானம்
பெருமையை விரும்பாத ஞானம்
ஊருக்காய் உழைக்கின்ற தாகம்
உணர்வோடு போராடும் வேகம்
யாருக்கும் கிட்டாத பேறாம் - இவை
யாவுமே மெய்ப்பட வேண்டும்!

உரிமைகள் மறுக்காத அரசு
உரிமைக்காய் முழங்கிடும் முரசு
தரம்பார்த்துப் பணிகின்ற சிரசு
தகுதிக்காய்த் தருகின்ற பரிசு
அரிதாரம் புசாத மனது
அறிவோடு வளர்கின்ற வயது
பொருள்தேடிப் போராடும் புவியின்
புனர்வாழ்வாய் மெய்ப்பட வேண்டும்!

கலைமீது தணியாத மோகம்
கணப்போதில் மறைகின்ற சோகம்
விலையில்லாக் கல்வி விவேகம்
விடிவுக்காய் உழைக்கின்ற தேகம்
நிலையான சுகம்காணும் யோகம்
நீதிக்காய் வளர்க்கின்ற யாகம்
அலைபோல அணியாக வந்தே
அமைந்திங்கு மெய்ப்பட வேண்டும்!

பெற்றோரைப் பணியாத பிள்ளை
பிறந்தமண் மதியாத பிரசை
கற்றோரை அறியாத சபைகள்
கருத்தின்றிப் பரிமாறும் உரைகள்
பற்றோடு புரியாத பணிகள்
பரிவோடு தீர்க்காத பிணிகள்
அற்றதோர் அற்புத வாழ்வு
அகிலத்தில் மெய்ப்பட வேண்டும்!

இதிகாசம் பலநூறு கண்டு
இயல் இசை நாடகம் கொண்டு
அதிகார வர்க்கத்தை வென்று
அகிலத்தின் திசையெங்கும் சென்று
துதிபாடும் தமிழ்மண்ணின் தீரம்
துலங்கட்டும் அவையில் இந்நேரம்
எதிர்வாதம் இதிலில்லை யார்க்கும் - என்ற
எனதாவல் மெய்ப்பட வேண்டும்!

- மன்னூரான்