நெடுஞ்சாலை வழியாக
நகரும் பேருந்து,
பழைய பத்திரிகையொன்றை
படித்தவண்ணமே
வீதியோரச் சங்கதிகளை
வேடிக்கை பார்த்தபடி
பயணிக்கிறேன்.
திடீரென அக்காட்சி
தென்படுகிறது விழிகளுக்கு,
மாமிசத் துண்டொன்றைக்
கவ்வியபடி
சாலையின் குறுக்கே
ஓடிவருகிறது நாயொன்று.
எதிரே வேகமாய்
வந்த வாகனம்
பதம் பார்க்கிறது
நாயை,
அதன் உயிரையும் சேர்த்தே.
துடிதுடித்து இறந்த நாயை
சூழ்ந்துகொள்கின்றன
மாமிசத் துண்டுக்காய்த்
துரத்திவந்த நாய்கள்.
ஆவேசமாய் வந்த அவை
அதிர்ச்சியுற்று நிற்க
மாமிசத் துண்டு மட்டும்
அநாதையாய்
இரண்டடி தள்ளி.
இறைச்சித்துண்டை
ஏறெடுத்தும் பாராமல்
இறந்துபோன நாய்க்கு
அஞ்சலியாய்க் குரைத்தபடி
அனைத்து நாய்களும்!
சம்பவம் மனதை
சலனப்படுத்தவே
பத்திரிகையின்மீது
பார்வையைச் செலுத்துகிறேன்.
'கொழும்பில் குண்டுவெடிப்பு'
கொட்டையெழுத்தில் தலைப்பு
கொள்ளைகொள்கிறது கண்களை.
சம்பவத் தளத்திலிருந்து
சற்றே தொலைவில்ஒருவர்
கையில் இரத்தம் வழிய
கலைந்து செல்லவே
அருகிருந்தோர் அந்நபரை
உதவிக்காய் உடனழைத்தும்
சட்டை செய்யாமல்
தன் சட்டைகொண்டு
கையைப் போர்த்தபடி
அவசரமாய் அங்கிருந்து
அகலும் முயற்சியில்அவர்.
வற்புறுத்தலாய் அவருக்கு
வைத்தியம் பார்க்கவென்று
இரத்தம் தோய்ந்த கையைப்
இறுகப் பற்றுகையில்
பதறி விலகையில்
படக்கென்று விழுந்ததாம்
தங்க வளையல்தரித்த,
வெடியில் சிக்குண்டு
வேறாகிப்போன
வனிதையொருத்தியின் கை.
- மன்னூரான்