(கடந்த 06-08-2011 அன்று ஜீவநதி சஞ்சிகையின் 4ம் வருட நிறைவையொட்டி அல்வாய் கலை அகத்தில் “மெய்ப்பட வேண்டும்!” எனும் தலைப்பிலான சிறப்புக் கவியரங்கொன்று இடம்பெற்றது. கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கவியரங்கில் கவிஞர்களான நாச்சியாதீவு பர்வீன், வட அல்வை சின்னராஜன், அல்வாயுர் செ.கணேசன், மன்னார் பி.அமல்ராஜ், வெ.துஷ்யந்தன் ஆகியோர் பங்கெடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அக்கவியரங்கில் அடியேன் வாசித்த கவிதை இதோ...)
மெய்ப்பட வேண்டும்!
இல்லார் கைகளில் பணமும்
இருப்போர்க்கு ஈந்திடும் மனமும்
கல்லாதாரிடம் அறிவும்
கற்றவரிடத்தில் பணிவும்
பொல்லாதோர்க்குநற் குணமும்
புண்ணியர்க்கென்றுமே நலமும்
இல்லையே என்கின்ற ஏக்கம்
இனியேனும் மெய்ப்பட வேண்டும்!
நேருக்கு நேர்மோதும் வீரம்
நிழலாகத் தொடர்கின்ற நேசம்
பேருக்காய் ஈயாத தானம்
பெருமையை விரும்பாத ஞானம்
ஊருக்காய் உழைக்கின்ற தாகம்
உணர்வோடு போராடும் வேகம்
யாருக்கும் கிட்டாத பேறாம் - இவை
யாவுமே மெய்ப்பட வேண்டும்!
உரிமைகள் மறுக்காத அரசு
உரிமைக்காய் முழங்கிடும் முரசு
தரம்பார்த்துப் பணிகின்ற சிரசு
தகுதிக்காய்த் தருகின்ற பரிசு
அரிதாரம் புசாத மனது
அறிவோடு வளர்கின்ற வயது
பொருள்தேடிப் போராடும் புவியின்
புனர்வாழ்வாய் மெய்ப்பட வேண்டும்!
கலைமீது தணியாத மோகம்
கணப்போதில் மறைகின்ற சோகம்
விலையில்லாக் கல்வி விவேகம்
விடிவுக்காய் உழைக்கின்ற தேகம்
நிலையான சுகம்காணும் யோகம்
நீதிக்காய் வளர்க்கின்ற யாகம்
அலைபோல அணியாக வந்தே
அமைந்திங்கு மெய்ப்பட வேண்டும்!
பெற்றோரைப் பணியாத பிள்ளை
பிறந்தமண் மதியாத பிரசை
கற்றோரை அறியாத சபைகள்
கருத்தின்றிப் பரிமாறும் உரைகள்
பற்றோடு புரியாத பணிகள்
பரிவோடு தீர்க்காத பிணிகள்
அற்றதோர் அற்புத வாழ்வு
அகிலத்தில் மெய்ப்பட வேண்டும்!
இதிகாசம் பலநூறு கண்டு
இயல் இசை நாடகம் கொண்டு
அதிகார வர்க்கத்தை வென்று
அகிலத்தின் திசையெங்கும் சென்று
துதிபாடும் தமிழ்மண்ணின் தீரம்
துலங்கட்டும் அவையில் இந்நேரம்
எதிர்வாதம் இதிலில்லை யார்க்கும் - என்ற
எனதாவல் மெய்ப்பட வேண்டும்!
- மன்னூரான்